வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிற்றில் நற்றூண் பற்றி…



உங்களை உங்க தோழனோ, தோழியோ தேடி வராங்க….

நீங்க வீட்டிலே இல்லை..

உங்க அம்மாக்கிட்ட நீங்க எங்கேன்னு கேட்கறாங்க…

உங்க அம்மா நீங்க எங்கே இருக்கீ்ங்கன்னு சொல்லுவாங்க…?

விளையாட, கடைக்கு, நூலகத்துக்கு, வெளிநாட்டுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு இப்படி ஏதேதோ பதில்கள் வரலாம்….

இந்த பதிலில் உங்க அம்மாவுக்கு பெருமிதம் (கர்வம் கலந்த மகிழ்ச்சி) தோன்றுமா?

சங்க காலம் காதலும், வீரமுமே இருகண்களாகப் போற்றப்பட்ட காலம்.

ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர்.

தன் மகனின் வீரம் குறித்த தாயின் பெருமிதமான பதில் இதோ...



சிறுமி - (சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறு)

“உன் மகன் எங்கு உள்ளானோ..?“

தாய் - என் மகன் எங்கிருந்தாலும் நானறியேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவேயாகும். அதனால் போர் எங்கு நிகழ்கிறதோ அங்கு தோன்றுவான்.

அவனைப் பார்க்கவேண்டுமானால் அங்குதான் பார்க்கலாம்.

பாடல் இதோ..

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

காவற் பெண்டு.

திணை - வாகை
துறை - ஏறாண் முல்லை.

(வீரம் செறிந்த குடியில் பிறந்த ஆண்மகனின் இயல்பைப் புகழ்தல் ஏறாண்முல்லையாகும்.)

பாடல் வழி ….

○ ஏறாண் முல்லை என்னும் புறத்துறைக்கான விளக்கத்தைப் பெறமுடிகிறது.
○ சங்ககால மகளிரின் வீரம் புலப்படுத்தப்படுகிறது.
○ காதலும் வீரமும் சங்ககால் மக்களின் இருகண்கள் என்ற கருத்துக்கு வீரத்துக்குச் சான்று பகர்வதாக இப்பாடல் அமைகிறது.
○ யாண்டு? என்னும் அக்கால வினா முறை சங்ககால பேச்சுமுறைக்குச் சான்றாகவுள்ளது.

யாண்டு என்பதே இன்று எங்கு என்று வழங்கப்படுகிறது.

4 கருத்துகள்:

  1. மிக நல்ல பதிவு.


    http://denimmohan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. இப்படி எத்தனை படித்தாலும் ஆர்வம் குன்றுவதில்லை இது தமிழின் சிறப்பா தமிழரின் சிறப்பா? வீரத்திலும் மன உறுதியிலும் பெண்ணின் நிலை சொல்லப்பட்டு இருக்கிறது ..

    பதிலளிநீக்கு
  3. எப்பவும் போல் தமிழுக்கு அழகு சேர்க்கும் பதிவு

    பதிலளிநீக்கு