வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 6 ஜூன், 2009

காதலின்- அகலம்- உயரம்- ஆழம் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 03

குறுந்தொகை - 03

மண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். 
காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. 
காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.

காதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. 
ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. 
சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். 
காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.

வாய்மொழிப் பாடல்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. 

ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.

காதலை வடிவப்படுத்த முடியுமா?
காதல் என்ன பொருளா?
 என்றெல்லாம் வினா எழலாம்.

அழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,

குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

குறுந்தொகை- 03
பாடியவர் - தேவகுலத்தார்

( தலைமகன் சிறைப் புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி,தோழி இயற்பழித்த வழி, தலைவி இயற்பட மொழிந்தது.)

சிறைப்புறம் – வீட்டுக்கு அருகே மறைவான இடம்.
வரைவு – திருமணம்
இயற்பழித்தல்- இயல்புகளைப் பழித்தல்.
தலைவன், தலைவியை மணம்செய்துகொள்ளாது களவு வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறான். அதனை உணர்ந்த தோழி தலைவியைக் காணத் தலைவன் வந்து சிறைப்புறமாக மறைந்திருப்பதை அறிந்து அவன் கேட்குமாறு அவனியல்புகளைப் பழித்தாள். அதனை ஏற்றுக் கொள்ளாத தலைவி, தோழியிடம் தன் காதலை எடுத்தியம்புவதாக இப்பாடல் உள்ளது.


குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு, 
மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு,

சொல்லப்புகுங்கால் நிலத்தைவிட அகலமானது,
நினையப் புகுங்கால் வானத்தைவிட உயரமானது,
உள்புகுந்து எல்லை காணப்புகுங்கால் கடலைவிட ஆழமானது.
 என்பதே இப்பாடலின் பொருளாகும்.


இதில் காதல் நட்பு என்றே சுட்டப்படுகிறது. 
மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்துகாண இயலாத தன்மை புலப்படுத்தப்படுகிறது. 
நிலம்,வான்,நீர் இவை தனித்தனியே பயன்படாது. 
நிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும் பின் அந்த நீர் மழையாகப் பொழிவதும் கடலில் சென்று கலப்பதும் இயற்கையாக இயைபுற்று அமைந்துள்ளது.
அது போல தலைவனோடு தாம் கொண்ட நட்பும் இயைபானது என்கிறாள் தலைவி.

ஒரு குழந்தையிடம் சென்று உனக்கு உன் அம்மாவை எவ்ளவு பிடிக்கும் என்று கேட்டால் நிறைய பிடிக்கும் என்று சொல்லும். 
எவ்ளவு நிறைய என்று கேட்டால் தம் கையை முழுவதும் விரித்து இவ்வளவு நிறைய என்ற கூறும். 
அந்த குழந்தை மனநிலையில்தான் வளர்ந்த பின்னும் நாம் இருக்கிறோம்.


நமக்கெல்லாம் அழகை ரசிக்கத்தெரியும் ஆனால் வெளிப்படுத்தத் தெரியாது. இன்னும் அழகை ரசிக்கக்கூட முடியாத இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போரும் உள்ளனர். 
இந்தப் பாடலில் புலவர் எவ்வளவு அழகாகக் காதலை வடிவப்படுத்தியுள்ளார.

காதலின் அகலம் நிலத்தின் அளவு.
காதலின் உயரம் வானத்தின் அளவு.
காதலின் ஆழம் கடலின் அளவு
என்கிறார்.

இவ்வாறு காதலை வடிவப்படுத்திய பாடல் உலக மொழிகளில் எங்காவது உண்டா? 
இல்லை இன்று வரை தமிழில் பல காதல் பாடல்கள் வந்துள்ளனவே அதிலாவது உண்டா?

அவ்வாறு இருந்தால் அது இப்பாடலின் தாக்கமாகவே இருக்கக் கூடும். அத்தகைய செம்மையான காதல் பாடல்களைக் கொண்டது நம் தமிழ் மொழி..

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்வோம்.

14 கருத்துகள்:

  1. அட

    உண்மையிலேயே காதலை வடிவு படுத்த இயலுமா

    முற்றிலும் புதிய கோணம்

    வாழ்க நிம் தமிழ் தொண்டு

    பதிலளிநீக்கு
  2. //காதலின் அகலம் நிலத்தின் அளவு.
    காதலின் உயரம் வானத்தின் அளவு.
    காதலின் ஆழம் கடலின் அளவு.//

    மொத்தத்தில் காதல் அளவிட முடியாதது என்று பொருள் கொள்ளலாம்...

    பதிலளிநீக்கு
  3. குறுந்தொகைப் பாடல்களை வைத்து காதலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

    தமிழன் என்பதில் என்றும்
    நான் பெருமைப் படுவதுண்டு...

    வாழ்த்துக்கள் முனைவர்.இரா.குணசீலன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பர்களே...

    பதிலளிநீக்கு
  5. குணா இம்முறை பின்னுட்டமில்லை வெறும் கைத்தட்டல் தான் எட்டுகிறதா உங்கள் காதுகளுக்கு.....காதலின் ஆழம் மீண்டும் தமிழ் நூல் மூலம் அளக்கப்பட்டது...உங்கள் பக்கம் இன்று காதலோடு சேர்ந்து மிளிர்கிறது குணா.....

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கைதட்டல் கேட்டது தமிழ்.......
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. காதலைப் பற்றிய அழகான பதிவு பாராட்டுகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. மிக நல்ல பாடலின் அறிமுகம். பிற்கால பக்தி இலக்கியங்களின் முன்னோடி போல் இருக்கிறது இந்த குறுந்தொகைப் பாடல். நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  9. அளவில்லாக் காதல் என்பது இதுதான்!

    பதிலளிநீக்கு
  10. நிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும் பின் அந்த நீர் மழையாகப் பொழிவதும் கடலில் சென்று கலப்பதும் இயற்கையாக இயைபுற்று அமைந்துள்ளது.//
    இயற்கை உண்ர்வு சிறப்பாக அளவிடப்பட்டிருப்பது எண்ணிமகிழத்தக்கது. பகிர்விற்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. எங்க தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தியது போல் உள்ளது
    காதல் என்பது இயற்கையான ஒன்று என்பதில் அறிவியலும் உள்ளது உண்மைதானே?

    பதிலளிநீக்கு